நாளை விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட்..! பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.!!

Senthil Velan

வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (12:40 IST)
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.   
 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பூமியைக் கண்காணிக்கும் செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை மற்றும் 420 வாட்ஸ் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட அதிநவீன இ.ஒ.எஸ்-08 எனும் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து நாளை (ஆக.16) காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
மேலும், இந்த இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோளில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோட் (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிஃப்ளெக்டோமெட்ரி பேலோட் (GNSS-R) மற்றும் எஸ்.ஐ.சி யுவி டோசிமீட்டர் (SiC UV Dosimeter) ஆகிய ஆய்வுக் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த கருவிகளின் பணிக்காலம் ஒரு ஆண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுமட்டுமல்லாது, இந்த இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோள் 24 மணி நேரமும் பூமியைக் கண்காணித்து மிட்-வேவ் ஐஆர் (MIR) மற்றும் லாங்-வேவ் ஐஆர் (LWIR) பேண்டுகளில் புகைப்படங்கள் எடுக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு, பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, எரிமலை செயல்பாட்டைக் கண்காணித்தல், தொழில்துறை மற்றும் மின் நிலைய பேரிடர்களைக் கண்காணித்தல் போன்ற பயன்பாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்.! சுதந்திர தின விழாவில் மத்திய அரசை சாடிய சித்தராமையா.!!
 
இந்தநிலையில், எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ள சூழலில்,  பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்