ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறப்பு: சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு..!

Siva
புதன், 5 ஜூன் 2024 (13:51 IST)
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் ஜூன் 10ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வெளியூர் சென்றிருந்த மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு வசதியாக ஜூன் 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
 
 சென்னையில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை , சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 7, 8 தேதிகளில் 1105 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம் , வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 160 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. 
 
அதேபோல் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளில் இருந்து பிற முக்கிய நகரங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மொத்தம் 1465 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 
 
இந்த சிறப்பு பேருந்துகள் குறித்த முழு விவரங்கள் மற்றும் இந்த பேருந்துகளில் பயணம் செய்ய முன் பதிவு ஆகியவற்றுக்கு போக்குவரத்து துறையின் இணையதளம் மற்றும் செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்