தென்மேற்குப் பருவமழை என்பது இந்தியாவின் முக்கியமான மழைக் காலம். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு நீர் வழங்கும் இந்த பருவம், இந்தாண்டு இயல்பை விட அதிக மழையை தரக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.
ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் இந்த பருவமழை, வழக்கம்போல ஜூன் 1ம் தேதி கேரளாவில் தொடங்கும். பின்னர் அது கர்நாடகம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், என தொடர்ந்து நாடு முழுக்க பரவுகிறது. அதிக மழை கிடைக்கும் இடங்களில் மௌசின்ராம், சிரபுஞ்சி, கேரளாவில் நெரியாமங்கலம் உள்ளிட்டவை அடங்கும். தமிழ்நாட்டில் முக்குருத்தி, தேவாலா, பந்தலூர், சின்னகல்லாறு போன்ற மலைப்பகுதிகள் அதிக மழை பெறும்.
இந்த ஆண்டில் நீலகிரி, தென்காசி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும். வால்பாறை, பொள்ளாச்சி, செங்கோட்டை, நாங்குநேரி போன்ற இடங்களும் அதிக மழைக்கான வாய்ப்பு உள்ள பகுதிகள்.
வானிலை மையம், OLR, காற்று திசை மற்றும் தொடர்ச்சியான மழைப்பதிவுகளை வைத்தே பருவமழை துவங்கியது என அறிவிக்கிறது. மழைக்காலத்தில் அணைகள் நிரம்ப வாய்ப்பு உள்ள நிலையில், இந்தியா முழுவதும் விவசாயம், நீர் தேவைகள் தண்ணீரால் நிறைவேறும் என நம்பலாம். இவ்வாறு தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்தார்.