ஆடு, மாடு குறுக்கே வந்தா அபராதம்? ரயில்வேதுறை எச்சரிக்கை!

ஞாயிறு, 20 நவம்பர் 2022 (10:13 IST)
சமீபமாக ரயில் பாதைகளில் கால்நடைகள் மீது ரயில்கள் சேதமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் சமீபமாக பல வழித்தடங்களில் செயல்பட தொடங்கியுள்ளன. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ரயில்களின் குறுக்கே கால்நடைகள் தண்டவாளத்தில் வருவதால் அவை மீது மோதி ரயில்கள் சேதமடைகின்றன.

சமீபத்தில் சென்னை – மைசூரு இடையே அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் அரக்கோணம் அருகே கன்றுகுட்டி ஒன்றின்மீது மோதியதில் சேதமடைந்தது. இந்த கால்நடைகள் மோதலை தவிர்க்க வேலிகள், தடுப்பு சுவர்கள் அமைப்பது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் ரயில் பாதைகளை கடந்து செல்வதை தடுக்க உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் ரயில்களின் மீது ஆடு, மாடுகள் குறுக்கிட்டு மோதினால் உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்