மாநகர பேருந்து, மெட்ரோ ரயிலுக்கு ஒரே அட்டை.. எப்போது முதல் அமல்?

Mahendran
வியாழன், 2 ஜனவரி 2025 (10:12 IST)
சென்னை மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகிய இரண்டுக்கும் ஒரே அட்டை மூலம் பயணச்சீட்டு பெற்று பயணம் செய்யும் திட்டம் இந்த மாதம் அமலுக்கு வர இருப்பதாக மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகத்தில் 2024-இல் 242 புதிய பிஎஸ்-6 பேருந்துகள் இணைக்கப்பட்டுள்ளன. 502 தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. குளிா்சாதன வசதிகளுடன் கூடிய பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் 320 குளிா்சாதன பேருந்துகளுக்கு டெண்டா் விடுக்கப்பட்டுள்ளது. இதை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.. 
 
வரவுக்கும், செலவுக்கும் இடையேயான வித்தியாசத் தொகை ரூ. 300 கோடியாக இருக்கும் நிலையில், பணிமனை மேம்பாட்டுக்காக அரசு ரூ. 111 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட 1,559 பேருந்துகளின் எண்ணிக்கை 1,655-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.. மின்னணு பயணச்சீட்டு கருவி வாயிலாக 99.9 சதவீத பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன. 
 
மாநகரப் பேருந்துகளில் 1.3 சதவீதம் டிஜிட்டல் பரிவா்த்தனை மூலம் பயணச்சீட்டை பயணிகள் பெறுகின்றனா். மெட்ரோ ரயில் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ‘என்சிஎம்சி’ எனப்படும் பொதுப் பயன்பாட்டுக்கான பயண அட்டை மூலம் பயணச்சீட்டு பெறும் திட்டம் இந்த மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.. சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ‘சிஎன்ஜி’ பேருந்துகள் இயக்கப்படும் திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளோம். 
 
மேலும், செயலி மூலம் பயணச்சீட்டு பெறும் திட்டம் நிகழாண்டு பாதிக்குள்ளாக செயல்படுத்த இருக்கிறோம். போக்குவரத்து சிக்னல்களில் பேருந்துகளுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டம் ஜனவரி இறுதிக்குள்ளாக செயல்படுத்தப்படும்..முக்கியமாக 850-க்கும் மேற்பட்ட ஓட்டுநா்களுக்கான மின்விசிறி, 2,248 பேருந்துகளின் பக்கவாட்டில் விபத்தை தடுக்கும் வகையில் தடுப்புக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. 
 
திட்டமிடுபவற்றை விட 10 சதவீத பேருந்துகளை கூடுதலாக இயக்கி வருகிறோம். சராசரியாக நாளொன்றுக்கு 32.19 லட்சம் பயணிகள் மாநகரப் பேருந்துகளில் பயணிக்கின்றனா். கட்டணமில்லா பயணத் திட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 10.28 லட்சம் பெண்கள், சுமாா் 7,483 மாற்றுத்திறனாளிகள், 547 திருநங்கைகள் பயன்பெறுகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்