சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிக்கை!

Mahendran

செவ்வாய், 19 நவம்பர் 2024 (14:34 IST)
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு இடையேயான உயர்மட்ட வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணிகள் 100% முடிந்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் -II வழித்தடம் 4-ல் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு நிலையத்திற்கு இடையே உயர்மட்ட வழித்தடத்தில் (C4-ECV01) தூண்கள் அமைக்கும் பணிகள் 100% வெற்றிகரமாக முடித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த உயர்மட்ட வழித்தடம் 8 கி.மீ. நீளத்தில் 4 இரட்டை அடுக்கு நிலையங்கள் மற்றும் 5 ஒற்றை அடுக்கு நிலையங்களை கொண்டது, இவற்றின் கட்டமைப்பு மற்றும் வழித்தட தூண்களை தாங்கும் வகையில் தரையின் கீழே 2,255 அஸ்திவார தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்டக் குழுவும் ஒப்பந்ததாரர்களும் பல சவால்களை எதிர்கொண்டனர். இதில் குறிப்பாக 24.45 கி.மீ நீளத்திற்கு பொது பயன்பாட்டில் உள்ள (உயர் மின்விநியோக கம்பிகள், குடிநீர் குழாய்கள், தொலைதொடர்பு கேபிள்கள், மழைநீர் வடிகால்.) போன்ற பயன்பாடுகளை மாற்று வழியில் செயல்படுத்துதல் மற்றும் 1,200 மி.மீ. நீளத்திற்கு நீர்வழிப்பாதை போன்ற முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாக்க வழித்தட தூண்கள் அமையவுள்ள இடங்களை மறுவடிவமைப்பு செய்தல் மற்றும் 1,500 மி.மீ. நீளத்திற்கு நீர்வழிப்பாதையை நீர் விநியோகத்திற்கு இடையூறு இல்லாமல் வெற்றிகரமாக மாற்று வழியில் செயல்படுத்துதல் ஆகியவை உள்ளடங்கும்.
 
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் திரு.எஸ்.அசோக் குமார் (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), GC2-AEON நிறுவனத்தின் குழுத் தலைவர் திரு. முருகமூர்த்தி, L&T நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு.ஜெயராமன், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்