சென்னை திருவான்மியூரை சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரியிடம், டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி செய்து 88 லட்சம் ரூபாய் அபரித்த வழக்கின் விசாரணையில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தியபோது, கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி ஒரே நாளில் 3.3 கோடி ரூபாய் மோசடி செய்ததும், அந்த பணம் 178 வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, 178 வங்கி கணக்குகளையும் சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கண்டறிந்து, அதை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொண்ட போது, சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. டெல்லி, கொல்கத்தா, ஜெய்பூர், மும்பை, கோவா ஆகிய இடங்களில் முகவர்கள் மூலம் பொதுமக்களின் செல்போன் எண்களை பெற்று, அதின் மூலம் ஏமாற்றி மிரட்டி பணம் பறித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இந்த பணத்தை கம்போடியா, வியட்நாம், தைவான் போன்ற நாடுகளில் வசிக்கும் சீன முதலாளிகளுக்கு முகவர்கள் அனுப்பி இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மோசடியின் பின்னணியில் சீனர்கள் இருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.