ஆடு வேடத்தில் திரியும் குள்ளநரி நீங்க..! – யாரை சாடுகிறார் செந்தில் பாலாஜி?

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (15:51 IST)
கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இதுகுறித்து ட்விட்டரில் மறைமுகமாக சாரி பதிவிட்டுள்ளார்.

நேற்று அதிகாலை கோவை மாநகரின் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான ஈஸ்வரன் கோவில் வீதியில் கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்ற நபர் உடல் சிதறி பலியானார்.

இந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அதேசமயம் இந்த விபத்து குறித்து எதிர்கட்சி தலைவர்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.



எதிர்கட்சிகள் விமர்சனம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி “தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது” என்று கூறியுள்ளார்.

மேலும் “கோவையில் சம்பவம் நடந்தவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி டிஜிபி சம்பவ இடத்திற்கு சென்றார். கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் எந்தச் சலனமும் இன்றி, தீபாவளி கொண்டாட்டத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுவிடாமல் அரசும், காவல்துறையும் சிறப்பாகச் செயல்பட்டன” என்று கூறியுள்ளார்.



கடைசியாக “அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும். ‘நீங்க 2000 வாங்கிக்குங்க, 3000 வாங்கிக்குங்க’ என்று பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கேவலப்படுத்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ரத்தவெறி கொண்ட சாத்தான்கள் ஓதும் வேதம் தமிழகத்தில் பலிக்கவே பலிக்காது” என்று குறிப்பிட்டு ஒரு எதிர்கட்சி தலைவரை அவர் மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்