திமுகவில் மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழி விடவேண்டும்!? யாரை சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின்?

Prasanth Karthick
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (12:09 IST)

சமீபத்தில் நடந்த திமுக நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், திமுகவில் வயதானவர்கள் அதிகம் இருப்பதாக சுட்டிக்காட்டி பேசியிருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின், மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என கூறியுள்ளதால் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது.

 

 

திமுக சார்பில் நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியபோது, திமுகவில் பழமையான ஆட்கள் இன்னும் தொடர்ந்து இருந்து கொண்டிருப்பது குறித்து கிண்டலாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து ரஜினிகாந்தை, அமைச்சர் துரைமுருகன் கிண்டல் செய்த நிலையில், நாங்கள் இருவரும் நண்பர்கள், அவர் அப்படி பேசுவதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என கூறியிருந்தார்.

 

இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் திமுக பொறியாளர் அணி நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காசோலைகளை வழங்கி பாராட்டினார்.

 

அப்போது பேசிய அவர் “திமுக இளைஞரணி அறிவித்து கிட்டத்தட்ட 17 ஆயிரம் மாணவர்கள் கலைஞரின் உயிரினும் மேலான பேச்சுப்போட்டிக்கு விண்ணப்பித்துள்ளனர். இளைஞர்கள் நம்ம பக்கம் வருவதற்கு தயாராக உள்ளனர். நாம்தான் அவர்களுக்கு வழிவிட்டு அரவணைத்து வழிநடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று முன் தினம் பேசும்போது எதற்காக அதிகமாக கைத்தட்டல்கள் வந்தது என்பதை கவனித்திருப்பீர்கள். அதை நான் சொன்னால் ஏதோ மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறேன் என நினைத்துக் கொள்வீர்கள். நீங்களே அதை தொலைக்காட்சியில் பார்த்து புரிந்துக் கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.

 

திமுகவில் தற்போது பல முக்கிய பதவிகளிலும் திமுகவின் மூத்த உறுப்பினர்களே பதவி வகித்து வரும் நிலையில் இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்