சமீப காலமாக அதிமுக - பாஜக இடையேயான வார்த்தை மோதல் தடித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கட்சிகள் கூட்டணியில் இருந்து வந்த நிலையில், தமிழக பாஜக தலைவரான அண்ணாமலைக்கும், அதிமுகவினருக்கும் அடிக்கடி மோதல் போக்கு எழுந்ததால் கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது. ஆனாலும் அவ்வபோது இரு கட்சியினரிடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் அண்ணாமலையை விமர்சித்து பேசியிருந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை நேர்மையற்றவர் என்றும், பாஜக கட்சி பல்வேறு மசோதாக்களை மக்களவையில் நிறைவேற்ற அதிமுகவை பயன்படுத்திக் கொண்டதாகவும் பல விமர்சனங்களை வைத்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “நேர்மை பற்றி எனக்கு சொல்லித் தர எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை. தவழ்ந்து சென்று காலில் விழுந்து பதவி வாங்கியவன் நான் அல்ல. நான் மானமுள்ள விவசாயியின் மகன். தற்குறி பழனிசாமி போல மானம்கெட்டு பதவி வாங்கவில்லை.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய டெண்டர் கட்சியாகவும், கூவத்தூரில் ஏலம் விட்டு எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் கொடுத்து ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு என்னை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?” என ஆவேசமாக பேசியுள்ளார். தொடர்ந்து அதிமுக - பாஜக இடையேயான இந்த வார்த்தை மோதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Edit by Prasanth.K