இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசியது உண்மைதான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சியில் சில நாட்களுக்கு முன்னர் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் ’உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் அவரது கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன். இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு’ என்று கூறினார். இந்த கருத்து அகில இந்திய அளவில் எதிர்ப்புகள் எழுந்தன.
கமலின் இந்த பேச்சு வட இந்தியா வரை விவாத அலைகளை எழுப்பியுள்ளது. பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் அவருக்கு எதிராக விமர்சனங்களை வைத்துள்ளனர். இதையடுத்து கமல் பிரச்சாரம் செய்யும் இடங்களில் செருப்பு வீசுதல் மற்றும் முட்டை வீச்சு போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதனை அடுத்து கமல் தனது பிரச்சாரத்தை சமூகவலைதளங்களில் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கமலின் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் சீமான். அதன்பின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது ‘ கமல் பேசியது வரலாற்று உண்மை. கமலஹசனின் கருத்தை வைத்து சுயலாபதிற்காக அரசியல் செய்கின்றனர்’ என கூறியுள்ளார்.