சுங்கக் கட்டணம் உயர்வா? மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (16:02 IST)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சுங்கக் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்த விரும்புவதை கண்டித்துள்ளார்.

இது சம்மந்தமான அறிக்கையில் ‘தமிழ்நாட்டிலுள்ள 14 சுங்கச்சாவடிகளிலும் 8 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்துவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருப்பதாகவும், அது செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருமெனவும் வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலையை நாடெங்கிலும் பன்மடங்காக உயர்த்தி, அத்தியாவசியப்பொருட்களின் கட்டற்ற விலையேற்றத்திற்கு வழிவகுத்துவிட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர்விலையையும் அதிகரிக்கச்செய்துவிட்டு, இப்போது சுங்கச்சாவடிக் கட்டணத்தையும் உயர்த்த எண்ணும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் வன்செயல் பெரும் சினத்தையும், கடும் எதிர்ப்பையும் மக்கள் மனங்களில் ஏற்படுத்தியுள்ளது. தவறான பொருளாதாரக் கொள்கைகளினாலும், மிகமோசமான ஆட்சிமுறையினாலும், கூட்டிணைவு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அளவுக்கதிகமான வரிச்சலுகைகளினாலும் நாட்டின் பொருளாதாரத்தை மொத்தமாய்ச் சூறையாடிவிட்டு, அதனை ஈடுசெய்ய நாட்டு மக்கள் மீது நாளும் சுமையேற்றும் பாஜக அரசின் எதேச்சதிகாரச் செயல்பாடுகள்  கடும் கண்டனத்திற்குரியது

எரிபொருள், எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றிலடித்துவிட்டு, சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்த எண்ணுவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல்!’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்