முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பு 2 முறை முன்மொழியப்பட்டதால் அது செல்லாது என்ற குண்டை வீசியிருக்கிறார் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா..
இன்று காலை தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிந்தார். ஆனால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ஓ.பி.எஸ் அணி மற்றும் திமுக தரப்பு கோரிக்கை வைத்தது. ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அதன்பின், மற்றொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதையும் சபாநாயகர் தனபால் நிராகரித்தார். எனவே, திமுக எம்.எல்.ஏக்கள் சபையை நடத்தவிடாமல், அமளியில் ஈடுபட்டனர். எனவே மதியம் ஒரு மணிக்கு சபையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
சட்டசபை மீண்டும் கூடியது போது, எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிந்தார். அப்போது, அதே கோரிக்கையை மு.க.ஸ்டாலின் முன் வைத்தார். ஆனால், சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து நடந்த அமளியால், மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதன்பின் நடந்த குரல் வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா “ஒரு தீர்மானம் இரண்டு முறை முன்மொழியப்படுவது சபை விதிகளுக்கு முரணானது. ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டு, அது நிறைவேற்றப்படவில்லை எனில், அதே தீர்மானத்தை மீண்டும் சபையில் கொண்டு வர முடியாது. 6 மாதம் கழித்துதான் அதே தீர்மானத்தை மீண்டும் கொண்டுவர முடியும்.
ஆனால் ஒரே நாளில் எடப்பாடி பழனிச்சாமி இருமுறை ஒரே தீர்மானத்தை கொண்டு வந்தது சட்டப்படி செல்லாது என ஆளுநர் முடிவெடுக்க முடியும்” என சேடப்பட்டி முத்தையா கூறியுள்ளார்.