அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்துள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற இறுதி முடிவை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது.
இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சசிகலா அணியில் தினகரன் தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதே நேரம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஆனால் ஒரு முக்கியமான நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் சசிகலா அணிக்கு தரப்பட்டால், ஆர்.கே.நகர் தொகுதியில் ஒருவேளை தினகரன் வெற்றி பெற்றால் அவர் முதல்வர் பதவியில் அமர கூடாது என்பது தான் நிபந்தனை.
இதனை எடப்பாடி பழனிச்சாமி தினகரன் தரப்பிடம் கூறியதாகவும், தினகரனும் அதற்கு சரி என கூறியதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் இரட்டை இலை சின்னம் சசிகலா அணிக்கு கிடைக்கும் என பலரும் கூறி வருகின்றனர். இந்த தகவலால் ஓபிஎஸ் அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் கடைசி வரை நம்பிக்கையுடன் இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சி செய்யும் மனநிலையில் தீவிரமாக ஓபிஎஸ் அணியினர் உள்ளனர்.