ஆஸ்கர் ஓபிஎஸ், வக்காலத்து திமுக: சட்டசபையில் சலசலப்பு!

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (09:34 IST)
பட்ஜெட் தாக்கலுக்கு பின் தமிழக சட்டசபையில் பொது விவாத கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நிதியமைச்சர் டி.ஜெயகுமார் ஓபிஎஸ் குறித்து பேசியதற்கு ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள், திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


 
 
நிதியமைச்சர் டி.ஜெயகுமார் பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்னர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று பட்ஜெட்டை சமாதியில் வைத்து மரியாதை செலுத்திவிட்டு வந்து சட்டசபையில் தாக்கல் செய்தார். ஆனால் இது சட்டசபை விதிகளுக்கு முரணானது என திமுக குற்றம் சாடியது.
 
இந்நிலையில் இது குறித்து பேசிய திமுக உறுப்பினர் ஒருவர், அண்ணா, கருணாநிதி, க. அன்பழகன் போன்றோர் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வந்த காட்சியைப் பார்த்திருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் வந்தபோதும் கூட பார்த்திருக்கிறோம். எல்லாரும் சாதாரணமாக எடுத்து வந்துதான் தாக்கல் செய்தனர். ஆனால் தற்போது ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்த விதத்தை குறிப்பிட்டு பேசினார்.
 
இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் அமைச்சர் டி.ஜெயகுமார், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பற்றி திமுக உறுப்பினர் இங்கே குறிப்பிட்டார். அவரைப் போல ஆஸ்கர் விருது வாங்கும் அளவுக்கு என்னால் நடிக்க முடியாது என்றார். இதற்கு ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
 
மேலும் திமுக உறுப்பினர்கள் சிலரும் எழுந்து நின்று அமைச்சர் பேசியது தவறு என கூறினர். அப்போது பதில் அளித்த அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன், ஓபிஎஸ்ஸுக்கு திமுக உறுப்பினர்கள் வக்காலத்து வாங்குவது ஏன்? என கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அடுத்த கட்டுரையில்