சசிகலா தரப்பில் இருந்து வெளியாகியுள்ள மற்றொரு ஆடியோவில் தொண்டர்களை பலியாக்குவதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடந்த நிலையில் எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் நுழைந்தது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் சார்பில் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அந்த கூட்டத்தில் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தியைக் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று சசிகலா தரப்பாக அடுத்த ஆடியோக்கள் சில வெளியாகியுள்ளன. அதில் ஒரு ஆடியோவில் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் தொண்டர்கள் ஜெயலலிதா பக்கம் வந்தனர். அதேபோல இப்போது இரண்டாவது முறையும் மீண்டு வருவோம். ஒருவர், இரண்டு பேரின் சுயநலத்துக்காக தொண்டர்களை பலிகடா ஆக்குவதா? என் முதுகில் குத்தி குத்தி இனிமேல் குத்துவதற்கு இடமே இல்லை என்ற அளவுக்கு செய்துவிட்டனர். அதே போல இப்போது தொண்டர்களுக்கும் செய்வதா? எனக் கூறியுள்ளார்.