உருவாகியது ரோணு புயல்: தமிழகத்தில் மீண்டும் மழை

Webdunia
வெள்ளி, 20 மே 2016 (19:46 IST)
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவில் நிலைகொண்டிருந்தது அது தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. ரோணு என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் ஒடிசா நோக்கி நகர்வதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


 
 
ஒடிசா நோக்கி நகரும் இந்த புயல் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் வங்கதேசத்தில் சிட்டக்காங் அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் எனவும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
வட தமிழக கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒருசில இடங்களில் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
குமரியில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் இரணியில் 24 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். கனமழை காரணமாக பள்ளியாடி என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் குமரியில் இருந்து திப்ரூகருக்கு செல்லும் ரயிலும், நாகர்கோயிலில் இருந்து மங்களூரு செல்லும் ரயிலும் செல்லவில்லை. அந்த வழித்தடத்தில் 7 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்