திருடப்பட்ட பசுமாடுகள் மினி வேனில் சந்தைக்கு கொண்டு வந்தபோது மீட்பு!

J.Durai

புதன், 14 ஆகஸ்ட் 2024 (12:42 IST)
திருச்சி மாவட்டம், மணப்பாறை மாட்டுச்சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் வருவது வழக்கம். இதே போல் இன்று நடந்த சந்தையில் ஒரு மினி வேனில் கொண்டுவரப்பட்ட இரண்டு பசு மாடுகளுக்கு அதனை கொண்டு வந்தவர்கள் வழக்கமான சந்தை மதிப்பைவிட மிகக்குறைவான விலையை கூறியதால் பிற வியாபாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
 
இதற்கிடையே திருவாரூர் மாவட்டம், சங்கேந்தி சிவன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவர் இன்று அதிகாலை திருடப்பட்ட தனது இரு மாடுகளை தேடி சந்தைக்கு வந்த நிலையில் குறைந்த விலை கூறப்பட்ட மாடுகள் ரமேஷ் என்பவரது பசு மாடுகள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மினி வேனில் வந்த இரு நபர்கள் தப்பிச் சென்ற நிலையில் மினி வேன் ஓட்டுனரான‌ திண்டுக்கல் மாவட்டம், குட்டுப்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவரை பிடித்து மணப்பாறை போலீசில் வியாபாரிகள் ஒப்படைத்தனர்.
 
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா மற்றும் வெற்றி என்ற இருவர்தான் வாடகைக்கு தனது மினிவேனில் மாடுகளை ஏற்றி வந்ததாக தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.‌ திருவாரூரில் திருடப்பட்ட மாடுகளை மணப்பாறை மாட்டு சந்தையில் விற்க முயன்ற சம்பவம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்