இரான்- இஸ்ரேல் போர் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இந்தியர்கள் நிலை என்ன?

Prasanth Karthick

திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (19:38 IST)

“ஒருவேளை போர் வெடித்தால், எண்ணெய்க் கிணறுகளைத்தான் முதலில் குறிவைப்பார்கள் எனச் சொல்கிறார்கள். என் தலை மீது இருக்கும் குடும்ப கடனுக்காக, எத்தனைப் போர்கள் வந்தாலும் இந்த வேலையை விட முடியாதே” என்கிறார் இப்ராஹிம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

திருநெல்வேலியைச் சேர்ந்த 27 வயதான இப்ராஹிம், மத்திய கிழக்கில் உள்ள சிறிய தீவு நாடான பஹ்ரைனில், ஒரு தனியார் எண்ணெய் நிறுவனத்தில் உதவிப் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இரானின் கடல் எல்லையை ஒட்டி பஹ்ரைன் உள்ளது.
 

இரானில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேவும், லெபனானில் ஹெஸ்பொலா ஆயுதக்குழுவின் முக்கிய தலைவரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டது, அதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா நடத்திய தாக்குதல் என மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் நீடித்துவருகிறது.
 

மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட 90 லட்சம் இந்தியர்கள் பணிபுரிகின்றனர். இஸ்ரேல் மற்றும் இரான், லெபனான் இடையே போர் வெடித்தால், அதே பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளையும் அது பாதிக்கும் என புவிசார் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
 

இந்த போர் பதற்றம் குறித்து மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கூறுவது என்ன? போர் மூண்டால் இந்தியாவிற்கும் அங்குள்ள இந்தியர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
 

மத்திய கிழக்கில் போர் பதற்றம்


 

கடந்த வாரம் புதன்கிழமை (ஜூலை 31) இரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியே, அவரின் வீட்டில் வைத்து கொல்லப்பட்டார்.
 

வான்வழி தாக்குதல் மூலம் அவர் கொல்லப்பட்டதை ஹமாஸ் இயக்கம் உறுதி செய்தது. பாலத்தீனத்தின் பிரதமராகவும், ஹமாஸ் அமைப்பின் தலைவராகவும் பலரால் அறியப்பட்ட ஹனியே, அக்டோபர் 7ஆம் தேதிக்கு பிறகு காஸாவில் நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தவர்.
 

அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் இந்தப் படுகொலையை நடத்தியுள்ளதாக இரானின் புரட்சிகர காவலர் படை (ஐஆர்ஜிசி) குற்றம் சாட்டியது.
 

ஹனியேவின் படுகொலைக்கு காரணமான இஸ்ரேலுக்கு ‘கடுமையான தண்டனை’ வழங்கப்படும் என இரான் தலைவர் ஆயதுல்லா அலி காமனேயி சூளுரைத்தார். அத்துடன், இஸ்மாயில் ஹனியே மரணத்திற்காக மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
 

இஸ்மாயில் ஹனியே கொலை தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை இஸ்ரேல்.
 

ஹனியே கொல்லப்பட்ட அதே நாளில், லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் நடத்தப்பட்ட வான்வவழி தாக்குதலில் ஹெஸ்பொலா தளபதி ஃபவுத் ஷுக்கர் கொல்லப்பட்டார் என்று அறிவித்தது இஸ்ரேல். ஹனியே கொல்லப்பட்டதாக வெளியான தகவலுக்கு முன்னதாக இந்த அறிவிப்பை இஸ்ரேல் வெளியிட்டது.
 

ஜூலை 27ஆம் தேதி அன்று இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்றில் நடைபெற்ற தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 நபர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்த இரண்டு கொலைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
 

இரானால் ஆதரவளிக்கப்பட்டு வந்த ஹமாஸ், ஹெஸ்பொலா ஆகிய இரண்டு ஆயுதமேந்திய குழுக்களின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டது அந்தப் பிராந்தியத்தில் பதட்டமான சூழலை ஏற்படுத்தியது.
 

இதையடுத்து, இரான் மற்றும் அதன் நட்பு நாடுகளின் சாத்தியமான தாக்குதல்களில் இருந்து இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாக, மத்திய கிழக்கில் கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை நிலைநிறுத்த உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கடந்த ஜுலை 3ஆம் தேதி கூறியது.
 

"புதிதாக நிலைநிறுத்தப்படும் போர் விமானங்கள் உள்ளிட்டவை, அமெரிக்கப் படையின் பாதுகாப்பை மேம்படுத்தும், இஸ்ரேல் பாதுகாப்புக்கான ஆதரவை அதிகரிக்கும். மேலும், எதிர்காலத்தில் ஏற்படும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவும் அமெரிக்கா தயார் நிலையில் இருப்பதை இது உறுதிசெய்கிறது” என்று பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
 

இஸ்ரேல் மீதான ஹெஸ்பொலாவின் தாக்குதல்


 

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நள்ளிரவில், உள்ளூர் நேரப்படி சுமார் 00:25 மணியளவில் வடக்கு இஸ்ரேலில் உள்ள பெய்ட் ஹில்லெல் (Beit Hillel) நகரில் பல ராக்கெட்டுகளை ஏவி, ஹெஸ்பொலா தாக்குதல் நடத்தியது.
 

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகளில் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஹெஸ்பொலா ஏவுகணைகளை இடைமறிப்பதைக் காண முடிந்தது. உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
 

போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை லெபனான் நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன.
 

"உங்களால் அங்கிருந்து வெளியேற முடியாவிட்டால், மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். மறு அறிவிப்பு வரும் வரை யாரும் லெபனானுக்கு செல்ல வேண்டாம்." என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
 

அதேசமயத்தில், இஸ்ரேலில் தங்கியுள்ள இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று டெல் அவிவ் நகரில் செயல்படும் இந்திய தூதரகம் கூறியது. இந்தியாவிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் செல்லும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 

இஸ்ரேலில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர், இரானில் 5 முதல் 10 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். லெபனானில் உள்ள இந்திய தூதரகத்தின் தகவல்படி, அந்த நாட்டில் சுமார் 4000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
 

மத்திய கிழக்கு நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம்


 

இஸ்ரேல் மற்றும் இரான், லெபனான் இடையே போர் வெடித்தால், அது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார் 'மோதல் மற்றும் அமைதி உருவாக்கம்' தொடர்பான ஆய்வுகளில் நிபுணரும், சமூக பணித்துறை பேராசிரியருமான கிளாட்ஸ்டன் சேவியர்.
 

தொடர்ந்து பேசிய அவர், “இதில் இந்தியாவுக்கு பொருளாதார பாதிப்புகள் அதிகமாக இருக்கும். போர் பதற்றம் அதிகரித்தால் மற்ற மத்திய கிழக்கு நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகமும் பாதிக்கும், குறிப்பாக வளைகுடா நாடுகள். அதைச் சமாளிப்பது இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கும்” என்கிறார்.
 

இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை செய்யும் முக்கிய நாடுகளான சௌதி அரேபியா, இரான் ஆகியவை மத்திய கிழக்கில்தான் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் கிளாட்ஸ்டன் சேவியர்.
 

இரானில் உள்ள இந்திய தூதரகத்தின் தகவலின்படி, கடந்த 2019-2020 காலகட்டத்தில் இந்தியா- இரான் இடையிலான வர்த்தகத்தின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் 39,370 கோடிகள். அதுவே 2022-2023 காலகட்டத்தில் இது 19,266 கோடிகளாகச் சரிந்துள்ளது.
 

“முக்கியமான விஷயம், அங்குள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வருவது. பல சவால்களைக் கடந்து அழைத்து வரப்படும் இந்தியர்களுக்கு இங்கு என்ன வேலை வாய்ப்புகள் உள்ளன, வரும்காலத்தில் அவர்கள் மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் என்ன என பல விஷயங்களை யோசித்து இந்திய அரசு முடிவெடுக்க வேண்டியிருக்கும்” என்கிறார் பேராசிரியர் கிளாட்ஸ்டன் சேவியர்.
 

வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள்


 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் 2022 தரவுகளின்படி, கிட்டத்தட்ட 90 லட்சம் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர்.
 

இதில் முதல் மூன்று இடங்களில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 35,54,274 பேரும், சௌதி அரேபியாவில் 24,65,464 பேரும், குவைத்தில் 9,24,687 பேரும் பணிபுரிவதாக அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.
 

உலக வங்கியின் 2022 தரவுகளின்படி, வளைகுடா நாடுகளில் இருந்து அதிகமாக பணம் அனுப்பப்படும் நாடுகளில் இந்தியாவே முதலில் உள்ளது. கிட்டத்தட்ட 70,000 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக இந்தியாவுக்கு பணம் அனுப்பப்படுகிறது.
 

இதில் 19,821 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வருகிறது.
 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 90 லட்சம் இந்தியர்களில் விருதுநகரைச் சேர்ந்த மணிகண்டனும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒருவர். குவைத் நாட்டில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில், 12 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
 

“இந்த வேலையின் மூலமாக கிடைத்த வருமானத்தில்தான் எனது குடும்பத்தின் கடனை அடைத்து, மூன்று தங்கைகளுக்கு திருமணமும் செய்து வைத்தேன். இப்போது சொந்த ஊரில் வீடும் கட்டி வருகிறேன். போர் பதற்றம் என செய்திகளில் வருகிறது. என்னால் நிச்சயம் வேலையை விட்டுச் செல்ல முடியாது. போர் ஏற்படக்கூடாது என்பதே இங்குள்ள, என்னைப் போன்ற தொழிலாளிகளின் பிரார்த்தனை” என்கிறார்.
 

இந்தியர்களை வெளியேற்றுவதில் இருக்கும் சவால்கள்


 

கடந்த 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டின் மேற்கு பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களை ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டதால் அங்கு உள்நாட்டு போர் வெடித்தது.
 

இதைத் தொடர்ந்து ஏமனில் இருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க இந்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் பெயரே ‘ஆபரேஷன் ரஹாத்’. இந்திய கப்பற்படை மற்றும் விமானப்படையின் உதவியோடு இந்த மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற்றது. இதன் மூலம் 4,748 இந்தியர்களும் 41 நாடுகளைச் சேர்ந்த 1,962 பேரும் மீட்கப்பட்டனர்.
 

ஏமன் நாட்டில் வானூர்தி ஆலோசகராக பணிபுரிகிறார் சாமுவேல் ஜெரோம். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஆபரேஷன் ரஹாத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.
 

“ஏமனில் இருந்த நிலையே வேறு, அப்போது மக்கள் வாழ்ந்த பகுதிகளில் நேரடி தாக்குதல்கள் நடைபெறவில்லை, ஆனாலும் 4,748 இந்தியர்களை பத்திரமாக அழைத்து வருவதில் பெரும் சவால்கள் இருந்தன. அப்படியிருக்க மற்ற மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்களை ஒரே நேரத்தில் அழைத்துவருவது மிகவும் கடினம்” என்கிறார்.
 

இதற்கு முன்பாக 2006இல் இஸ்ரேல்- லெபனான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டபோது, லெபனான் நாட்டிலிருந்து 1,800 இந்தியர்களை மீட்டு அழைத்துவந்தது இந்திய அரசு. இதற்கு ‘ஆபரேஷன் சுகூன்’ (Operation Sukoon) என பெயரிடப்பட்டது.
 

‘போருக்கு முன்பாகவே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’


 
 

“போர் என்று வந்துவிட்டால் அந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பாதிக்கப்படுவது வழக்கம். அதுவும் மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் என்றால் அது இந்தியாவை நேரடியாகப் பாதிக்கும்.” என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை பேராசிரியர் ராமு மணிவண்ணன்.
 

தொடர்ந்து பேசிய அவர், “யுக்ரேன்- ரஷ்யா போரில் சிக்கிய இந்தியர்கள் நாடு திரும்ப எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டார்கள் என்பதை நாம் பார்த்தோம். எனவே மீண்டும் ஒரு போர் சூழல் என்றால் அதற்கு ஏற்றவாறு இந்திய அரசு அங்குள்ள இந்தியர்களை தூதரகங்கள் மூலம் வழிநடத்த வேண்டும்.” என்கிறார் அவர்.
 

அதேபோல நிலைமை சரியானவுடன் மீண்டும் இந்தியர்களை அனுப்புவதற்கும் அந்தந்த நாடுகளுடன் ஆலோசனை நடத்தி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் ராமு மணிவண்ணன்.
 

“இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்துவருவது முக்கியம், ஆனால் அதோடு அரசின் வேலை முடிந்துவிடாது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பலர் குடும்ப கஷ்டத்திற்காக செல்கிறார்கள். எனவே அதையும் அரசு கணக்கில் கொள்ள வேண்டும்” என்கிறார் ராமு மணிவண்ணன்.
 

ஏமனில் இருந்து 2015இல் இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்ட இந்தியர்களில் பலர் மீண்டும் ஏமனிற்கே திரும்பிவிட்டார்கள் என்று கூறுகிறார் சாமுவேல் ஜெரோம்.
 

“தாய் நாடு திரும்புவது மகிழ்ச்சிதான், அதுவும் உயிருக்கு ஆபத்தான சூழல் என்று வரும்போது. ஆனால் நல்ல வேலை, சம்பளம், வாழ்வில் முன்னேறலாம், கடனை அடைக்கலாம் என்ற நம்பிக்கையில் வருபவர்கள் மீண்டும் இங்கு வரவேண்டும் என்று தானே நினைப்பார்கள்.” என்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்