வேலூர் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் நகை திருடியதாக கைது செய்யப்பட்ட ஒருவர், ஜாமினில் வெளிவந்த நிலையில் தற்போது மீண்டும் நகை திருட்டில் ஈடுபட்டிருப்பதை அடுத்து, மீண்டும் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் 15 கிலோ தங்கம் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட வேலூரை சேர்ந்த டிக்காராம் என்பவர், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்த பின்னரும் அவர் மீண்டும் நகை திருட்டில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜாமினில் வெளிவந்த டிக்காராம், சென்னை குரோம்பேட்டையில் உள்ள வீட்டின் கதவை உடைத்து பத்து சவரன் நகைகள் திருடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வீட்டின் எதிரே நடந்த கட்டிட வேலைக்கு சென்று, வேலை செய்வது போல் நடித்து, வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து கொண்டு, இரவில் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.
கைரேகை எதுவும் இல்லாத நிலையில், அங்கு கட்டிட வேலை நடந்ததை அறிந்த போலீசார், அங்கு வேலை செய்த அனைவரிடமும் விசாரணை செய்துள்ளனர். விசாரணையின் போது டிக்காராம் மீது சந்தேகம் எழுந்ததால், அவரை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.