மே மாதத்தின் முதல் நாளில் தமிழகத்தின் வெப்ப நிலையைப் பற்றி தனியார் வானிலை ஆராய்ச்சி நிபுணர் பிரதீப் ஜான், தனது சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், வேலூர் மாவட்டம் 39.6 டிகிரியுடன் தமிழகத்தில் அதிக வெப்பநிலை பெற்ற இடமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மொத்தம் மூன்று இடங்களில்தான் வெப்பநிலை 38 டிகிரியை தாண்டி உள்ளதாகவும் தெரிவித்தார். இது சாதாரண மே மாதங்களை விட கொஞ்சம் நிவாரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் வெப்பம் மெதுவாக உயரும் நிலையில், நாகை மற்றும் கடலூர் பகுதிகளில் வெப்பநிலை 37 டிகிரியை கடந்துவிட்டது.
மேலும், தென்மேற்கு பருவமழை நெருங்குவதால், மேற்குப் பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் ஏற்கனவே ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
இன்று மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்: நீலகிரி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி. இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் வரும் எனவும் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.