சென்னையில் வைர வியாபாரியிடம் ரூ.23 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த வைர வியாபாரி சந்திரசேகர். இவர் சமீபத்தில் மதுரை தொழிலதிபர் ஒருவரது 17 காரட் வைர நகையை விற்க இடைத்தரகர்களை அணுகியுள்ளார். அதன்பேரில் வில்லிவாக்கம் ராகுல், ஆரோக்கியராஜ், சுப்பன் என்ற மூன்று இடைத்தரகர்கள் மூன்று பேரை அழைத்து வந்துள்ளனர்.
அதில் ராஜன் என்ற லண்டனை சேர்ந்த தொழிலதிபர் என்று ஒருவர் அறிமுகம் செய்துக் கொண்ட நிலையில் அவர் நண்பர் விஜய், உதவியாளர் அருணாச்சலம் ஆகியோர் வைரத்தை பார்த்துவிட்டு ரூ.23 கோடி விலை பேசியுள்ளனர்.
பின்னர் நேற்று வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வந்து நகையை கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். அங்கு சந்திரசேகர் சென்ற நிலையில் அவரை அறைக்குள்ளேயே கை, கால்களை கட்டிப் போட்டுவிட்டு அவர்கள் நகையோடு தப்பியுள்ளனர்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். லண்டன் தொழிலதிபரை அழைத்து வந்த நகை இடைத்தரகர்கள் விசாரிக்கப்பட்டனர். இதற்கிடையே அனைத்து செக் போஸ்ட்டுகளுக்கும் இதுகுறித்து அலெர்ட் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் தூத்துக்குடி, பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை போலீஸார் சோதனை செய்தபோது அதில் வைர நகை இருந்தது. அதை தொடர்ந்து அதில் வந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆனால் அவர்கள் வடபழனியில் நகை வியாபாரியிடம் இருந்து நகையை திருடியவர்கள் அல்ல. ஆனால் அந்த வைர நகை இவர்களிடம் இருந்துள்ளது.
இடைத்தரகர்கள், லண்டன் தொழிலதிபர், தூத்துக்குடியில் சிக்கிய மர்ம நபர்கள் என குழப்பத்தில் ஆழ்த்தும் இந்த வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Edit by Prasanth.K