ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பு ; அதிர்ச்சியில் எடப்பாடி : பின்னணி என்ன?

Webdunia
சனி, 6 அக்டோபர் 2018 (16:44 IST)
எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக துணை முதல்வர் ஓ.பி.எஸ் என்னை சந்தித்தார் என தினகரன் கூறியிருப்பதுதான் தற்போது தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

 
கடந்த ஜூலை மாதம் தினகரன் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு நடந்ததாகவும், இந்த சந்திப்பின்போது ஈபிஎஸ் ஆட்சியை கவிழ்க்க ஓபிஎஸ் திட்டமிடப்பட்டதாகவும், கடந்த வாரம் கூட தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் அப்பாயின்மெண்ட் கேட்டதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கொடுத்த பேட்டி அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேட்டி கொடுத்த தினகரனும் இதை உறுதி செய்தார். 
 
ஆனால், இதுகுறித்து விளக்கம் அளித்த ஓபிஎஸ் ‘தினகரனை சந்தித்தது உண்மைதான் என்றும், தினகரன் மனம்விட்டுப் பேச வேண்டும் எனக் கூறியதால் அரசியல் நாகரிகம் கருதி சென்றேன். ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு தான் முதல்வராக வேண்டும் என்ற நோக்கில் தினகரன் பேசியதால் தான் அதற்கு உடன் படவில்லை’ என்றும் கூறினார்.
 
மேலும் ‘ஆட்சியை கலைக்கப் பார்ப்பதாக தினகரன் என் மீது குற்றச்சாட்டு கூறி வருகிறார். நான் இந்த ஆட்சியில் துணை முதல்வராக இருக்கிறேன். நானே எப்படி ஆட்சியைக் கலைப்பேன். நான் ஏற்கனவே மூன்று முறை முதல்வராக இருந்துள்ளேன் அதுவே போதும். கட்சியும் ஆட்சியும் அந்த குடும்பத்தின் கைகளில் சென்றுவிடக் கூடாது என்றுதான் நானே தர்மயுத்தம் நடத்தினேன்’ என்றும் கூறினார்.

 
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த தினகரன் “என்னை ஓபிஎஸ் சந்தித்தது உண்மை. தற்போது மாற்றிப் பேசுகிறார். தற்போதைக்கு என்னை சந்தித்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆட்சியை கலைக்கவே நான் அவரை சந்தித்தேன் என விரைவில் ஓபிஎஸ் ஒத்துக்கொள்வார். அந்த உண்மையை அவரிடமிருந்து எப்படி வரவழைக்க வேண்டும் எனும் ரகசியம் எனக்கு தெரியும்” என பேட்டி கொடுத்துள்ளார்.
 
அதாவது, கொங்கு மண்டலத்தின் பிடியில் ஆட்சி சென்றுவிட்டதை விரும்பாத ஓ.பி.எஸ், தினகரனுடன் செல்வதே சிறந்தது என கருதியும், மீண்டும் முதல்வர் பதவியில் அமர்வதற்காகவும் தினகரனை சந்திக்க முடிவெடுத்தார் என தினகரன் தரப்பில் கூறப்படுகிறது. இதை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட எடப்பாடி, ஆட்சியை தக்க வைக்க வேண்டுமெனில், ஓ.பி.எஸ்-ஐ தன் பக்கம் இழுத்துக்கொள்வதே நல்லது என கருதியே இரு அணிகளையும் இணைக்க சம்மதித்தார் எனக்கூறப்படுகிறது.

 
ஆனால், அதன் பின்னரும் தனது ஆட்சியை கவிழ்ப்பதற்காகவும், முதலமைச்சர் பதவியில் அமர மீண்டும் ஓபிஎஸ் தினகரனை சந்திக்க முயன்றார் என்கிற செய்தி எடப்பாடிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். எனவேதான், ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் எனக்கு இல்லை என நேற்று கொடுத்த பேட்டியில் ஓபிஎஸ் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனாலும், ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியிலும், ஓ.பி.எஸ்-ஐ தங்கள் அணிபக்கமே வைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளிலும் எடப்பாடி தரப்பு ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அதேநேரம், இன்னும் என்னென்ன ரசிகயங்களை தினகரன் தரப்பு வெளியிடுமோ என்கிற அச்சம் ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு வந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்