ராம்குமாரின் சம்மதத்துடன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படவில்லை : உறவினர் பரபரப்பு பேட்டி

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (18:38 IST)
சுவாதி கொலை வழக்கில், ராம்குமாரின் சம்மதமின்றி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று, சிறையில் அவரை சந்தித்து விட்டு வெளியே வந்த உறவினர் கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலை வழக்கில், நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சுவாதியை தான்தான் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.  
 
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ராம்குமார் இந்த கொலையை செய்யவில்லை என்றும், உண்மையான குற்றவாளியை மறைக்க போலீசார் முயல்கிறார் என்றும் வழக்கறிஞர் கிருஷணமூர்த்தி என்பவர் பரபரப்பு புகார்களை கூறினார். மேலும், ராம்குமாரின் ஜாமின் மனுவையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.  
 
இதனை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ராம்குமாரின் ஜாமீன் மனுவை ஏற்கக் கூடாது என்பதற்கான அரசின் விளக்கத்தை தாக்கல்செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டார். தற்போதைய விசாரணைநிலையில், இணைப்பு மனுக்களை அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதி மனுமீதான விசாரணையை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ராம்குமார் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில் அவரை சந்தித்து விட்டு வெளியே வந்த உறவினர் கூறுகையில் “ராம்குமார் யாரிடமும் சகஜமாக பேசக்கூடிய மனநிலையில் இல்லை. அவர் மன அழுத்தத்துடன் காணப்படுகிறார். அவருடைய சம்மத்துடன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படவில்லை. அவரை நிரந்தரமாக சிறையில் வைப்பதற்கான முயற்சிகள் நடப்பது போல் தெரிகிறது. இதை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம். ராம்குமாருக்கென ஒரு தனி வக்கீல் குழுவே இயங்க உள்ளது” என்று அதிரடியாக கூறினார்.
அடுத்த கட்டுரையில்