வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்களை சந்திக்க ரஜினி முடிவா? பரபரப்பு தகவல்

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (18:21 IST)
சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் சிஏஏ சட்டத்திற்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நேற்று இரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் போராட்டக் குழுவினரிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்ட போதிலும் தற்போது போராட்டம் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஏற்கனவே சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியிலும் தனது ஆதரவை உறுதி செய்தார். இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று தான் கருதுவதாகவும் அப்படி ஒருவேளை பாதிப்பு வந்தால் முதல் ஆளாக நின்று போராடுவேன் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் இந்த சட்டம் ஜனாதிபதி ஒப்புதலுடன் அமலுக்கு வந்துவிட்டதால் வாபஸ் வாங்க வாய்ப்பு இல்லை என்று தான் கருதுவதாகவும். தூண்டுதலின் பேரில் இந்த போராட்டத்தை யாரும் எதிர்க்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்
 
இந்த நிலையில் ரஜினியின் இந்த கருத்துக்கு அரசியல்வாதிகள், இஸ்லாமிய அமைப்பினர் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிஏஏ சட்டத்தின் அபாயத்தை புரிந்து கொள்ளாமல் ரஜினிகாந்த் பேசுவதாக அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் சிஏஏ குறித்து தனது விளக்கத்தை இஸ்லாமிய  அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மத குருமார்களிடம் அளிக்க உள்ளதாகவும் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் இஸ்லாமிய அமைப்பினர் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த சந்திப்பு விரைவில் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படி ஒரு சந்திப்பு நடந்தால் ரஜினியின் விளக்கத்தை போராட்டக்குழுவினர் ஏற்றுக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்