2ஜி வழக்கு ; யானை கதை கூறி இறுதி வாதத்தில் ஸ்கோர் செய்த ஆர்.ராசா

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (10:41 IST)
2ஜி வழக்கு விசாரணையின் இறுதி வாதத்தில் யானை கதை கூறி நீதிபதி உட்பட நீதிமன்றத்தில் இருந்த அனைவரையும் ஆர்.ராசா சிரிக்க வைத்துள்ளார்.

 
நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது எனக்கூறிய நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவித்தார். 
 
இந்த வழக்கு விசாரணையின் போது பலமுறை ஆர்.ராசாவே வழக்கறிஞரின் உதவியின்றி, பலமுறை தானாகவே சிபிஐ தரப்பு வழக்கறிஞரிடம் வாதாடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 2ஜி வழக்கு விசாரணையில் இறுதி விவாதத்தின் போது நீதிபதியிடம் ராசா ஒரு கதையை கூறியுள்ளார். 
 
கண் பார்வையற்ற நான்கு பேர் ஒரு யானையை தொட்டுப்பார்த்தனர். காலை தொட்டவர் அது தூண் என்றார். வாலை தொட்டவர் அதை கயிறு என்றார். காதை தொட்டர் அதை முறம் என்றார். உடலை தொட்டவர் சுவர் எனக்கூறியதாக ஒரு கதை உள்ளது. இதுபோலத்தான் ஸ்பெக்ட்ரம் பற்றி சரியான புரிதலின்றி சிபிஐ, சி.ஏ.ஜி, ஜே.பி.சி, அமலாக்கத்துறை ஆகியோர் அணுகியதாலேயே இத்தனை பிரச்சனை எனக்கூறினார்.
 
இதைக்கேட்டு நீதிபதி ஓ.சைனி உட்பட நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். அன்றைய தினம்தான், தீர்ப்பு எழுதும் தேதியை அறிக்கும் முடிவிற்கு நீதிபதி வந்தார். 
 
குற்றச்சாட்டுகளை சிபிஐ தரப்பு நிரூபிக்கவில்லை. அதனால், சந்தேகத்தின் பலனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, திறைமையாக வாதாடி தான் குற்றமற்றவன் என்ற ஒரே நிலைப்பாடில் உறுதியாக நின்று ராசா விடுதலை ஆகியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்