ஜெ.வுக்காக எடுத்த பால்குடம் நிகழ்ச்சியில் பொதுமக்களை அவதிப்படுத்திய அமைச்சர்

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (13:14 IST)
முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் பால்குடம் எடுத்த நிகழ்ச்சியால் சிவகாசியில் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் அதிமுகவினர் முதல்வர் நலம் பெற வேண்டி பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், செவ்வாயன்று காலை சிவகாசியில் உள்ள பத்திர காளியம்மன் கோவிலில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுகவினர் பாலாபிஷேகம் செய்யும் நிகழ்சியை நடத்தினர்.
 
இதையடுத்து, மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை சிவகாசி பேருந்து நிலையம் அருகே வரவழைத்தனர். பின்பு, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் பெண்கள் அனைவரும் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு சென்று பாலாபிஷேகம் செய்தனர்.
 
பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சிக்காக பேருந்துகள் அனைத்தும் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. குறிப்பாக திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாற்றுப் பாதையில் விடப்பட்டன.
 
தாயில்பட்டி, சங்கரன்கோவிலில் இருந்து சிவகாசி வரும் பேருந்துகள் வழக்கமான பாதையில் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே பேருந்து நிலையத்திற்கு சென்றனர். இதனால் அலுவலர்கள் பலர் கால தாமதமாக பணிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
 
பால்குட ஊர்வலம் சிவகாசியில் உள்ள பஜார் வழியாக கோவில் வரை செல்ல காவல்துறையினர் அனுமதி வழங்கினர். இதனால், இரு சக்கர வாகனத்தில் செல்வோர், வியாபாரிகள் கடும் அவதிப்பட்டனர்.
அடுத்த கட்டுரையில்