நாக்பூர் பகுதியை சேர்ந்த கனையா நாராயணன் என்பவர், தனது முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் செலுத்த பணமில்லாத காரணத்தால், பெண்ணின் கழுத்தில் இருந்து தங்கச் சங்கிலியை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனையா தனது மனைவியை பிரிந்ததால், மாதந்தோறும் 6,000 ரூபாய் ஜீவனாம்சம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் செலவுக்குக்கூட பணமில்லாமல் தவித்த கனையா, ஜீவனாம்சம் கொடுக்க முடியாமல் சிறைக்கு செல்ல நேரிடும் என்ற பயத்தில் சங்கிலி பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில், 74 வயது மூதாட்டி ஒருவரின் சங்கிலியை பறித்தபோது, அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கனையாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் நகையை அமரதீப் கிருஷ்ணராவ் என்பவரிடம் விற்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அமரதீப் கிருஷ்ணராவும் கைது செய்யப்பட்டார். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.