தமிழகம் முழுவதும் போராட்டம்..! ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது..!

Senthil Velan
செவ்வாய், 30 ஜனவரி 2024 (13:20 IST)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர்  தமிழகம் முழுவதும் ஒரு நாள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
அதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு  மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். 
 
பின்னர் சாலை மறியலில் ஈடுப்பட்ட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
 
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய போராட்ட குழுவினர், தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு, நிறைவேற்றாவிட்டால் வருகின்ற பிப்ரவரி 15-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தனர்.
 
அதற்கும் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வருகின்ற பிப்ரவரி 26-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக போராட்ட குழுவினர் எச்சரித்துள்ளனர்.

ALSO READ: கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை..! கேரளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!!

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்