பிரியங்கா வேட்புமனு தாக்கலின்போது கார்கே வெளியே அனுப்பப்பட்டாரா? என்ன நடந்தது?

Mahendran
வியாழன், 24 அக்டோபர் 2024 (11:00 IST)
வயநாடு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட போது காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியே அனுப்பப்பட்டதாக பாஜக குற்றம் கூறியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று, வயநாடு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது கார்கே வெளியே அனுப்பப்பட்ட வீடியோ  வைரலாகி உள்ளது. இதனால் பாஜக மூத்த தலைவர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.
 
காங்கிரஸ் தலைவர் ஆக இருந்தாலும் அவர் வெறும் "ரப்பர் ஸ்டாம்ப்" தான் என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது என்றும், ஒரு தலித் தலைவரை காங்கிரஸ் குடும்பம் அவமதித்துவிட்டது என்றும் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
 
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "பிரியங்கா காந்தி முதல் முறையாக வேட்புமனு தாக்கல் செய்யும் போது எங்கே இருந்தீர்கள் கார்கே? காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் வெளியே அனுப்பப்பட்டீர்களா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இதற்கு விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ், "வேட்புமனு தாக்கல் செய்யும் அறையில் ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதி காரணமாக அவர் வெளியே சென்றார். ஆனால் சில நிமிடங்களில் அவர் மீண்டும் உள்ளே வந்து விட்டார். மக்களின் கவனத்தை திசை திருப்ப பொய் சொல்வதே பாஜகவின் ஒட்டுமொத்த கொள்கை" என்றும் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்