கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்கள் பூரண குணமடைய வேண்டி ஆங்காங்கே யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொதுக் கூட்டம் நடத்தாமலும், மற்ற அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு கூறாமலும் ஒரு சில இடத்திலேயே நடத்தி முடித்து வருவதாக அ.தி.மு.க தலைமைக்கு தகவல் தெரிந்து விட, இதை தெரிந்து கொண்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அனைத்து ஊர்களிலும் பால்குட நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடத்த முடிவெடுத்தார்.
எனவே, அ.தி.மு.க மகளிரணியினை வைத்து பால்குடத்தினை சிறப்பாக நடத்துவது என்று ஆலோசனை செய்து, அதற்காக மகளிரணியினை தயார் படுத்தினர்.
மேலும் பங்கேற்கும் பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க மகளிரணியினருக்கு ரூ.200 மற்றும் ஒரு குடம் இலவசமாக கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதில் ஒரு சிலருக்கு பிளாஸ்டிக் குடங்கள், பித்தளை குடங்கள், சில்வர் குடங்கள் என்று பங்கேற்ற மக்களுக்கு கொடுத்ததோடு, அரைக்குடம் தான் பாலும் கொடுக்கப்பட்டது. இதனால் பலர் அதிருப்தி அடைந்தனர்.
மேலும், நல்ல நேரம் 9 ¼ முதல் 10 ¼ மணி முதல் தான் என்பதை அ.தி.மு.க வினர் தெரிந்திருந்தும், துல்லியமாக 8.30 மணிக்கு ஆரம்பிக்க பட உள்ளதாக தகவல் தெரிவித்ததோடு, அவர்களை காலை 6 மணி முதல் காத்திருக்க வைத்தனர். இதனால், பொறுத்திருந்த மக்கள், அந்த நிகழ்ச்சியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடக்கி வைப்பதற்குள் அவர்களே துவக்கினர்.
இதையறிந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாதியில் பக்தர்கள் மற்றும் மகளிரணியினருடன் கலந்து கொண்டார். மேலும் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்ததால் ஆங்காங்கே போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மேலும் இந்த பால்குடத்தில் பித்தளை குடங்கள், சில்வர் குடங்கள், ரப்பர் குடங்கள் கொடுத்த நிகழ்ச்சியும், கைக்குழந்தைகளுடன் மணிக்கணக்கில் காத்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களை பார்த்து சமூக நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.