தமிழக சட்டமன்றத்தில் நேற்று திமுக எம்.எல்.ஏ பூங்கோதை கருக்கலைப்பு செய்வதால் வழங்கப்படும் உதவித்தொகை ஆண்களுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு குறைவாக இருப்பதாகவும், இந்த விஷயத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு ஏன் என்றும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று பேசினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'தமிழகத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் கருத்தடைக்கான அரசு உதவித்தொகையை அதிகரித்து தரவேண்டும் . தமிழகத்தில் கருத்தடை பயன்பாட்டில் பெண்கள்தான் அதிக அளவில் கருத்தடை அறுவைசிகிச்சை செய்துகொள்கிறார்கள். ஆண்களில் 91 சதவிகிதம் பேர் ஆணுறையைப் பயன்படுத்திக்கொள்வதால், ஆண்கள் கருத்தடை சிகிச்சை செய்துகொள்வது குறைவாக உள்ளது. அதேபோல கருத்தடை செய்துகொள்ளும் ஆண்களுக்கு உதவித் தொகையாக 1,200 ரூபாய் கொடுக்கப்படுகிறது. ஆனால், பெண்களுக்கு 250 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதில் ஏன் இந்த பாரபட்சம்?
ஆண்களே குறைவாகத்தான் கருத்தடை அறுவைசிகிச்சை செய்கிறார்கள். அவர்களுக்குக் கூடுதல் தொகை வழங்கும் அரசு, அதிக அளவில் கருத்தடை செய்யும் பெண்களுக்கு ஏன் வழங்கவில்லை. ஆண்களுக்கான கருத்தடை அறுவைசிகிச்சை குறித்து விழிப்புஉணர்வையும் அதிகரிக்க வேண்டும். கருத்தடை செய்வதில் ஆண், பெண் என்ற பாரபட்சம் ஏன் பார்க்க வேண்டும்?” என்று கூறினார்.