கள்ளக்குறிச்சியில் மரணமடைந்த மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாளான இன்று மரக்கன்றுகள் வழங்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
கோப்புப்படம்
கள்ளக்குறிச்சியில் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதை தொடர்ந்த போராட்டங்கள் மற்றும் கலவரத்தால் பள்ளி சூறையாடப்பட்டதுடன், பள்ளி வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. மாணவி மரணம் குறித்து தனியார் பள்ளி மீதும், கலவரம் தொடர்பாக கலவரக்காரர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாள் காரணமாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்க ஸ்ரீமதியின் பெற்றோர் அனுமதி கேட்டுள்ளனர்,. ஆனால் கூட்டம் சேர்வதால் தேவையற்ற பிரச்சினைகள் எழலாம் என்று கருதிய காவல்துறையினர் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
ஸ்ரீமதியின் படத்திற்கு மாலை அணிவித்த பெற்றோர் கண்ணீர் வடித்து அழுதது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.