போலீசையும் விட்டு வைக்காத ஆன்லைன் சூதாட்டம்! – தூக்கிட்டு தற்கொலை!
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (11:40 IST)
திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுவதும், அதனால் பணத்தை இழப்பவர்கள் தவறான முடிவுகளை எடுப்பதுமான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருப்பாய்த்துறை பகுதியை சேர்ந்த காவலர் ஆனந்த். வாத்தலை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் இவர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். அதில் பணத்தை இழந்ததால் தனது நண்பர்களிடமும் பணம் கடன் வாங்கி விளையாடி தோற்றதாக கூறப்படுகிறது.
இதனால் தீராத மன உளைச்சல் மற்றும் கடன் சுமைக்கு உள்ளான ஆனந்த் வீட்டிற்கு வந்து சீருடையை கூட மாற்றிக்கொள்ளாமல் நள்ளிரவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,