நடிகர் சசிகுமார் ஒத்துழைப்பு கொடுக்காததால் சினிமா ஃபைனான்சியர் அன்பு செழியனை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமாரின் உறவினரும், அவரின் கம்பெனி புரடெக்ஷனை நிர்வகித்து வந்தவருமான அசோகுமார் சமீபத்தில் கந்து வட்டி தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். மேலும், தான் எழுதிய கடிதத்தில், தனது தற்கொலைக்கு சினிமா ஃபைனான்சியர் அன்பு செழியனே காரணம் என எழுதி வைத்திருந்தார்.
இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்பு செழியனுக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். 3 நாட்கள் ஆகியும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர் “ சசிகுமார் புகார் கொடுத்த அன்று இரவே அன்பு செழியன் தலைமறைவாகி விட்டார். கடைசியாக அவரது செல்போன் தி.நகர் பகுதியில் இருந்ததாக பதிவாகியுள்ளது. அன்பு செழியனிடம் சசிகுமார் எவ்வளவு பணம் வாங்கினார். அதற்காக என்ன சொத்து ஆவணங்களை அடமானம் வைத்துள்ளார் என்பது குறித்து எந்த தகவலும் இன்னும் எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை.
அவைகள் பற்றி தெரிந்தால்தான் இந்த வழக்கை மேற்கொண்டு வேறு பிரிவுக்கு மாற்றம் செயது குறித்து முடிவு செய்யப்படும். இருந்தாலும் அன்புசெழியனை பிடிக்கும் பணியில் நாங்கள் தீவிரம் காட்டி வருகிறோம். சசிகுமார் இதுவரை நேரில் வந்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அசோக்குமார் இறுதி சடங்குகள் மற்றும் காரியம் ஆகியவற்றை முடித்து விட்டு வருகிற திங்கட்கிழமை சசிகுமார் காவல் நிலையத்திற்கு சென்று தனது தரப்பு விளக்கத்தை அளிப்பார் என தெரியவந்துள்ளது.