கேட்ட சீட்டை அதிமுக கொடுக்க மறுத்ததால், திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது கும்பகோணம் கிழக்கு ஒன்றியம் பாமக.
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தயாராகி வருகின்றனர்.
அதேபோல ரஜினி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது.
இந்நிலையில், கும்பகோணம் கிழக்கு ஒன்றியம் உள்ளூர் ஊராட்சி மன்ற தேர்தலில் 12வது வார்டை தங்களுக்கு ஒதுக்கும்படி பாமகவினர் அதிமுகவினரிடம் கேட்டுள்ளனர். ஆனால், அதிமுக அந்த வார்டை ஒதுக்க மறுத்துவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் 100க்கும் மேற்பட்டோர் கும்பகோணம் திமுக எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் மற்றும் ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோரை நேரில் சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
மேலும் திமுக சார்பில் 12வது வார்டில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்வதோடு, அதிமுக வேட்பாளர்கள் படுதோல்வி அடைவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்வதாக உறுதியும் அளித்துள்ளனர்.