போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மக்கள் கடும் அவதி!

Webdunia
திங்கள், 15 மே 2017 (09:34 IST)
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று தோல்வியில் முடிந்ததையடுத்து திட்டமிட்டபடி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர்.


 
 
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 7000 கோடி ரூபாய் நிலுவைத்தொகையாக உள்ளது. இந்த நிலுவைத்தொகை, பஞ்சப்படி, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்றவற்றை பல காலமாக வழங்காமல் இருப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் மே 15-ஆம் தேதி (இன்று) முதல் ஈடுபட போவதாக அறிவித்திருந்தது.
 
இதனையடுத்து 6 கட்டங்களாக தமிழக அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.750 கோடி நிலுவைத் தொகை வழங்க ஒப்புதல் அளித்தார். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் ரூ.500 கோடி வழங்க ஒப்புதல் அளித்தார்.
 
இதனால் போக்குவரத்து சங்கங்கள் கடும் அதிருப்தியடைந்தனர். 7000 கோடி ரூபாய்க்கு பதிலாக வெறும் 1200 கோடி ரூபாய் மட்டுமே வழங்க ஒப்புதல் அளித்திருப்பது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதனையடுத்து திட்டமிட்டபடி இன்று முதல் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
 
இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் போக்குவரத்து முடங்கி, தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். பல இடங்களில் வேலை நிறுத்தம் நேற்று மாலையே தொடங்கியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக 15000 காவலர்கள் சென்னையில் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
மேலும் தமிழகம் முழுவதும் 1 லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் மட்டும் குறைவான அளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.
 
ஆனால் பல பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மாற்று ஏற்பாடாக பாதிக்கும் குறைவான பேருந்துகள் தற்போது சில இடங்களில் இயக்கி வந்தாலும் அது எத்தனை நாளைக்கு முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வை அரசு விரைவில் கொண்டு வரவில்லை என்றார் தமிழகமே ஸ்தம்பிக்கும் நிலமை உருவாகும்.
அடுத்த கட்டுரையில்