ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மேனகா காந்தி மனு தாக்கல் செய்தாரா? இல்லையா?

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2017 (15:29 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீவிர போராட்டம் நடந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு மத்திய அரசிடம் கலந்து ஆலோசித்து அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியது.


 

ஆனால் பொதுமக்கள் இந்த அவசர சட்டம் தேவையில்லை. இது தற்காலிகமான ஒன்றே எங்களுக்கு நிரந்தர தீர்வாக நிரந்தர சட்டம் வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தை கைவிடாமல் போராடி வந்தனர். இதனையடுத்து இன்று போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக சில இடங்களில் அடிதடி நடத்தியும் கலைத்து வருகின்றனர்.

ஆனால் போராட்டத்தை கைவிட பொதுமக்கள் தயாராக இல்லை. இந்த சட்டம் நிலையானது இல்லை, எப்போது வேண்டுமானாலும் இதற்கு தடை வாங்கிவிடுவார்கள் என போராட்டக்காரர்கள் தொடர்ந்து கூறிவந்தார்கள்.

அதுபோலவே, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்ததாக கூறப்பட்டது.

ஆனால், இந்த தகவலை பீப்பிள்ஸ் பார் அனிமல்ஸ் அமைப்பு மறுத்துள்ளது. மேலும், இது குறித்து அந்த அமைப்பு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

அதில். “ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து, பீப்பிள்ஸ் பார் அனிமல்ஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இது தவறான செய்தி, யாரோ விஷமத்தனமாக பரப்பிய செய்தியாகும். தமிழக மக்களை தவறாக வழிநடத்துவதற்காக, சிலசேனல்கள் இதுபோன்ற செய்திகளை ஒளிபரப்பி வருகின்றன.

பீப்பிள்ஸ் பார் அனிமல்ஸ் அமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எந்தவிதமான மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த விசயத்தில், பரவும் வீண் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளன.
அடுத்த கட்டுரையில்