குழந்தைகள் எழுதிய கடிதங்களால் மனம் மாறி போதைப் பழக்கத்தை கைவிட்ட பெற்றோர்கள்!

J.Durai
சனி, 17 ஆகஸ்ட் 2024 (12:59 IST)
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 
 
மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள இந்தப் பள்ளியில் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் மாணவ மாணவிகளே பெரும்பாலும் படித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்த பள்ளியில் மாணவர்களுக்கு கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஆசிரியரிகளின் வழி காட்டுதலில் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் தங்கள் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் என தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு கடிதம் எழுதினர்.
 
அதை அஞ்சலகம் மூலம் யாருக்கு எழுதி இருந்தார்களோ அவரவர் முகவரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் உள்ள தீய பழக்கவழக்கங்களை சுட்டிக்காட்டி அவற்றால் தங்கள் எவ்வளவு மன வேதனை அடைந்திருக்கின்றோம் ஆகவே இந்த கடிதத்தின் மூலம் உடனடியாக தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும் என்ற மனதின் வலியை வரிகளாக சுட்டிக் காட்டி இருந்துள்ளனர். 
 
இந்த கடிதம் கிடைக்கப்பெற்றதும் அதனை படித்த பெற்றோர்கள் மத்தியில் தங்கள் பிள்ளைகள் எவ்வளவு மன வேதனையோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டனர். 
 
இதில் 15 பேர் உடனடியாக பள்ளிக்கு வந்து தாங்களிடம் பல ஆண்டுகாலமாக இருந்த குடிப்பழக்கத்தை உடனடியாக கைவிடுவதாகவும், சிலர் தங்கள் பயன்படுத்தி வந்த புகையிலை உள்ளிட்டவர்களை கை விடுவதாகவும் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கூறினர்.
 
இதையடுத்து சமுத்திரம் அரசு பள்ளியின் சார்பில் மாணவ மாணவிகளின் மனம் மாறிய பெற்றோர்களை கௌரவிக்கும் வகையில் சுதந்திர தினத்தன்று போதை பழக்கங்களில் இருந்து விடுதலையான15 மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்
 
முன்னதாக பள்ளிக்கு வருகைதந்த பெற்றோர்களை பள்ளி வளாகத்திற்கு வெளியில் இருந்து பறை இசை முழங்க வரவேற்று பள்ளிக்கு அழைத்து வந்தனர். 
 
அப்போது மாணவர்கள் வரிசையாக நின்று மனம்மறிய பெற்றோர்களை வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றியபின் தங்கள் குழந்தைகளின் கடிதத்தால் மனம் மாறி போதைப் பழக்கத்தை கைவிட்ட பெற்றோர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்
 
அப்போது தந்தை போதைப் பழக்கத்தை 15.08.2024 முதல் கைவிடுகிறேன் எனவும் இனிவரும் காலங்களில் இதனை பயன்படுத்த மாட்டேன், மற்றவர்களையும் இப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க என்னால் ஆன முயற்சியை மேற்கொள்வேன் என தங்களது குழந்தைகளுக்கு உறுதிமொழி அளிக்கும் வகையில் பள்ளியின் சார்பில் தயாரிக்கப்பட்ட தந்தையின் உறுதிமொழி என்ற சான்றிதழில் பெற்றோர்கள் கையெழுத்திட்டு தங்களது குழந்தைகளுக்கு கொடுத்தனர். அப்போது மாணவர்கள் கரவொலி எழுப்பிய நிகழ்வு அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. மனம் மாறிய தங்கள் பெற்றோருக்கு மகிழ்ச்சி தெரிவித்து குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை பெற்றதற்கு நன்றி தெரிவித்தனர்.
 
தந்தை கொடுத்துள்ள உறுதிமொழி சான்றிதழை மாணவர்கள் அவரவர் வீட்டின் சுவற்றில் மாட்டி வைக்கும்போது அதனை பார்க்கும் தந்தை மீண்டும் தீய வழியில் செல்லமாட்டார் என்பது ஆசிரியர்களின்‌ நம்பிக்கையாக உள்ளது. 
 
மனம் மாறிய பெற்றோர்கள் மனம் மாறக் காரணமான பள்ளிக்கு நன்றி தெரிவித்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்