ஜெயலலிதா பேசும் நிலையில் இல்லை : தா. பாண்டியன் தகவல்

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (13:42 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசும் நிலையில் இல்லை என்றும், அவரை பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 14 நாட்கள் ஆகியும் அவர் இன்னமும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பவில்லை.
 
இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது. மருத்துவமனை தரப்பில் இருந்து வரும் விளக்கங்கள் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இல்லை. அரசு தரப்பிலும் முதல்வரின் உடல் நிலைகுறித்து எந்த விளக்கமும் இல்லை.
 
அவரை சந்திக்க பல்வேறு தலைவர்கள், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். ஆனால், ஆளுநர் உட்பட அவர்கள் யாரும் முதல்வரை நேரில் பார்க்கவில்லை என்று தெரிகிறது. சசிகலா மற்றும் அதிமுக அமைச்சர்களை மட்டுமே சந்தித்து, அவரின் உடல்நிலை பற்றி தெரிந்து கொண்டு திரும்பி விடுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
 
இந்நிலையில், கம்யூனுஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
நான் முதல்வரை நேரில் சந்திக்கவில்லை. ஆனால், அவரை சந்தித்தவர்களை நான் சந்தித்து பேசினேன். அவர் நலமாக இருக்கிறார் என்று கூறினார்கள். அவர் பேசும் நிலையில் இல்லை. எனவே, அவர் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன். அவரின் உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அவரது தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்” என்று கூறினார். 
 
முதல்வர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அவர் இன்னும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டியுள்ளது என அதிமுக நிர்வாகிகள் தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.
 
வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்