அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அறிக்கை வெளியிட்டுள்ள ஓபிஎஸ் தனது ஆதரவாளர் வைத்திலிங்கத்தை துணை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து விடுவிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வந்த நிலையில் சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ஈபிஎஸ் அறிவித்தார்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அதற்கு எதிராக ஈபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக அவ்வபோது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவ்வாறு தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளரான வைத்திலிங்கத்தை கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு பதில் இனி வைத்திலிங்கம் கட்சியின் கழக இணை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்று அந்த அறிக்கையில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் தனது ஆதரவாளர்களான கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோரும் கழக துணை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்கள் என தெரிவித்துள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிறகும் ஓபிஎஸ் தொடர்ந்து இவ்வாறு அறிவிப்புகளை வெளியிட்டு வருவது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.