முக்கிய பத்திரங்களை காணவில்லை – ஓபிஎஸ் & கோ மீது புகார்!

சனி, 23 ஜூலை 2022 (13:11 IST)
சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஓபிஎஸ், ஆதரவாளர்கள் மீது சி.வி.சண்முகம் எம்.பி. புகார் அளித்துள்ளார்.


அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் எழுந்தது. இந்நிலையில் கடந்த வாரம் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்து உள்ளே புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் அலுவலகத்தை திறக்க அனுமதி கோரி ஈபிஎஸ் – ஓபிஎஸ் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவாளர்கள் சாவியை பெற்று அதிமுக தலைமை அலுவலகத்தை திறந்தனர். ஆனால் அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பரிசுப் பொருட்கள், வெள்ளி வேல் உள்ளிட்ட பல பொருட்கள் திருட்டு போயுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டினார்.

இதனைத்தொடர்ந்து தற்போது சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஓபிஎஸ், ஆதரவாளர்கள் மீது சி.வி.சண்முகம் எம்.பி. புகார் அளித்துள்ளார். 37 வாகனங்களின் அசல் பதிவு சான்றிதழ், சபையர் தியேட்டர் இடத்தின் அசல் பத்திரத்தை காணவில்லை. மேலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்க கவசம் பற்றிய மதுரை வங்கி பாஸ்புக், ஆவணத்தை காணவில்லை என  அந்த புகாரில் தகவல் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்