12 ஆயிரம் ரூவா செல்போன் உங்களுக்காக 3 ஆயிரம்! – தர்ம அடி வாங்கிய டெலிவரி பாய்!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (11:09 IST)
சென்னையில் 12 ஆயிரம் மதிக்கத்தக்க செல்போனை 3 ஆயிரத்திற்கு விற்பதாக கூறி சீட்டுக்கட்டுகளை டெலிவரி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியில் முகமது அலி என்பவர் வசித்து வருகிறார். தனது மகள் ஆன்லைனில் படிக்க செல்போன் வாங்க திட்டமிட்டு வந்த அவர் ஃபேஸ்புக்கில் 12,000 மதிப்புள்ள செல்போன் 3,000க்கு விற்கப்படுவதாக விளம்பரம் வந்துள்ளது. பொருளை வாங்கிய பிறகு பணம் கொடுத்தால் போதும் என்று கூறப்பட்டிருந்ததால் முகமது அலி செல்போனை ஆர்டர் செய்துள்ளார்.

ஆர்டர் செய்து 6 நாட்கள் கழித்து சரவணன் என்பவர் செல்போனை டெலிவரி செய்ய வந்துள்ளார். அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு பார்சலை பிரித்து பார்த்த முகமது அலிக்கு அதிர்ச்சி. உள்ளே செல்போனுக்கு பதிலாக இரண்டு சீட்டுக்கட்டுகள் இருந்துள்ளன. உடனடியாக சரவணனை பிடித்துக் கொண்ட முகமது அலி கத்தி கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.

பொருட்களை டெலிவரி செய்வது மட்டுமே தன் வேலை, இதை யார் அனுப்பினார்கள் என்பது குறித்து தெரியாது என சரவணன் சொல்லியும் கேட்காமல் அங்கிருந்தவர்கள் சரவணனை அடித்து உதைத்துள்ளனர். இதுகுறித்து சரவணன் போலீஸில் அளித்த புகாரின் பேரில் முகமது அலியை அழைத்து போலீஸார் விசாரித்துள்ளனர். ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த மோசடி குறித்து போலீஸார் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைன் மோசடி சம்பவத்தால் சம்பந்தமில்லாமல் டெலிவரி பாய் தர்ம அடி வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்