தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்குள்ளாவார்கள்! – சீமான் எச்சரிக்கை

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (19:22 IST)
மத்திய அரசு கொண்டு வருகிற ‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான் , தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்குள்ளாவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளராக சீமான் வெளிட்டுள்ளா அறிக்கையில் கூறியுள்ளதாவது :

மத்திய அரசு கொண்டு வருகிற ‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் அளிக்கிறது. நாடு முழுமைக்கும் பொது விநியோகத்தை இணைக்கும் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் மிகப்பெரிய சுரண்டலையும், அபகரிப்பையும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பேராபத்து இருக்கிறது.

.பொது விநியோகப் பகிர்வின் மூலம் தமிழகத்தில் ஒரு கோடியே 99 இலட்சத்து 95 ஆயிரத்து 299 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், தற்போது ‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை’ திட்டம் செயற்படுத்தப்பட்டால் அது தமிழகத்தின் பொது விநியோகப்பகிர்வையே முற்றிலும் சீர்குலைத்துவிடும்.

இந்தியப் பெருநிலத்திலேயே தனித்துவம் மிக்கதாக விளங்குவது தமிழ்நாடுதான். சிறப்புகள் பலவாய்ந்த தமிழர்களின் அத்தகையத் தாயகத்தை வடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாற்றவே இத்திட்டம் முழுக்க முழுக்கப் பயன்படும். ஏற்கனவே, பல இலட்சக்கணக்கான வடஇந்தியர்கள் தமிழகத்திற்குள் உட்புகுந்து வாக்குரிமையைப் பெற்று தமிழர்களின் அரசியலைப் பங்கிடும் வேளையில், தமிழர்களுக்கான வேலைவாய்ப்பைத் தட்டிப்பறித்துத் தமிழர்களின் பொருளியல் வாழ்வுக்கு வேட்டுவைத்துக் கொண்டிருக்கிற சூழலில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழர் தாய்நிலம் வடஇந்தியர்களின் படையெடுப்பால் பெரிய அபாயத்தைச் சந்திக்கும்; அயலவர்களின் ஆக்கிரமிப்பால் திக்கித் திணறும். சொந்த நிலத்திலேயே தமிழர்கள் அகதிகள் போல அல்லாடுகிற நிலை உருவாகும்.

ஆகவே, வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது’ எனும் முழக்கத்தை முன்வைத்து தன்னாட்சி உரிமைகேட்ட பேரறிஞர் அண்ணாவின் பேரில் இயங்கும் அதிமுக இத்திட்டத்தில் இணைந்தால் வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.இத்திட்டத்தில் இருக்கிற பேராபத்தினை உணர்ந்து, தமிழர்களை வடஇந்தியர்கள் சுரண்டுவதற்கும், தமிழர்களைப் பசி பட்டினியில் தள்ளுவதற்கும் வழிவகை செய்கிற ‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை!’ திட்டத்தை வன்மையாக எதிர்க்க வேண்டும் எனவும், எதன்பொருட்டும் அத்திட்டத்தில் இணையக்கூடாது எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்