சசிகலாவுடன் கை கோர்க்க ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை?

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (12:06 IST)
அ.தி.மு.க.வை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி  மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரமாகி வருகிறார்கள். அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு விரைவில் தீர்ப்பை வெளியிட உள்ளது. அந்த தீர்ப்பை பொருத்துதான் இரு தரப்பினரும் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.


ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரிய குளத்துக்கு சென்று தங்கி உள்ளார். அங்கு அவர் தனது ஆதரவாளர்களை அழைத்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் சசிகலாவுடனும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுடனும் இணைந்து செயல்பட ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து இருக்கிறார். அவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுக்குழு தீர்ப்பு சாதகமாக வரும் பட்சத்தில் அதிரடியாக சசிகலாவை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்கவும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது. எனவே சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சந்திப்பார் என்று தெரிகிறது. அப்போது அ.தி.மு.க.வை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், குறிப்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்ய ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் விரும்புவதாக கூறப்படுகிறது. தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் இருவரும் இணைந்து மாவட்ட வாரியாக சென்று ஆதரவு திரட்டவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்துடன் சசிகலா தூதர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பெரியகுளத்தில் தங்கி இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்து பூஜைகள் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள நம்பூதிரிகளின் மூலம் யாகம் மற்றும் பூஜைகள் நடத்தி வருவதாக சொல்கிறார்கள். அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் வெற்றி பெறவே இந்த சிறப்பு பூஜைகளை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்