சென்னையில் தண்ணீர் லாரிகளுக்கு திடீர் தடை; காவல்துறை அதிரடி

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (17:10 IST)
சென்னையில் காலை மற்றும் மாலை குறிப்பிட்ட நேரங்களில் தண்ணீர் லாரிகளை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


 
சென்னை மாநகரப் பகுதியில் மெட்ரோ ரயில் பாதை பணி காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் வாகனங்கள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயில் பாதை பணி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
 
போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுவதால் தண்ணீர் லாரிகளை குறிப்பிட்ட நேரங்களில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆகிய நேரங்களில் தண்ணீர் லாரிகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை சார்பில் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
 
மேலும் இந்த போக்குவரத்து காவல்துறை விதித்துள்ள கட்டுபாட்டை மீறும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்