நிர்மலா தேவி கூறிய விவிஐபிகளின் பெயர்கள் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (11:43 IST)
கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பல விவிஐபிகளின் பெயர்களை கூறியுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.

 
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அவர் மீது 3 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் பல பெண்களின் புகைப்படங்கள் மற்றும் பல உயர் அதிகாரிகளின் செல்போன் எண்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கானது தற்பொழுது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

 
விசாரணையில் முதலில் நிர்மலா தேவி வாயை திறக்கவே இல்லையாம். நான் தவறாக எதுவும் பேசவில்லை எனக் கூறிவந்துள்ளார். ஒருகட்டத்தில், நான் உண்மையை கூறினால் விளைவு மோசமாக இருக்கும் என்பதால் அமைதியாக இருக்கிறேன் எனக்கூறியுள்ளார். அதன்பின்பு, போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், அவர் சில விவிஐபிக்களின் பெயர்களை கூறியிருக்கிறார். 
 
மதுரை பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிக்க வரும் மாணவிகளை வழிநடத்தும் பணி அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், பல்கலைக்கழகத்தின் பணிபுரியும் பல பேராசிரியர்களுக்கு அவர் நெருக்கமாக இருந்துள்ளார். எனவே, கல்லூரி பெண்களை சரிகட்டி உயர் அதிகாரிகளின் இச்சைக்கு பணியவைத்தால் பல காரியங்கள் சாதிக்கலாம். பல்கலைக்கழகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும் என ஆசைப்பட்டே நிர்மலா தேவி காய்களை நகர்த்தி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், கல்லூரி நிர்வாக குழுவில் ஏற்பட்ட மோதல் காரணமாக, தான் பேசிய ஆடியோவை வெளியே விட்டு விட்டனர் எனவும் அவர் விசாரணையில் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
தற்போது அவர் சிறையில் இருப்பதால், மீண்டும் அவரை நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்