நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : ரூ. 20 லட்சம் கைமாறியுள்ளதாக தகவல்..

வியாழன், 26 செப்டம்பர் 2019 (20:37 IST)
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சீப் மெடிக்கல் ஆஃபிஸ்ராக பணிபுரிந்து வந்தவர் வெங்கடேசன். இவரது மகனான உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளது சமீபத்தில் தெரியவந்தது.
இது குறித்து மருத்துவ கல்லூரியின் டீன், அளித்த புகாரின் பேரில் விசாரனை நடைபெற்றது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர் தனது குடும்பத்துடன் தலைமறைவானதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
 
இதனிடையே மாணவர் சார்பாக முன் ஜாமீன் வழங்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தது.
 
இதனை தொடர்ந்து உதித் சூர்யா  குடும்பத்தோடு திருப்பதியில்  கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உதித் சூர்யாவின் மேல் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் அவரது தாய் கயல்விழி மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரையும் சென்னை சிபிசிஐடி காவல்துறையினர் தேனி சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அவர்களிடம் இன்று சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.
 
இதனைத்தொடர்ந்து, உதித்சூர்யா , தந்தை வெங்கடேசன் ஆகிய இருவரும் ஆள்மாறாட்டத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இருவர் மீது ஆள்மாறாட்டம், கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
ஆள் மாறாட்டம் செய்ய உதவிய தரகர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக விசாரணையில்  தெரியவந்துள்ளது.
 
கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் தேனி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்த ஆள்மாறட்டத்திற்காக நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு ரூ. 20 லட்சம் வைரை கைமாறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது. அதனால் இந்த சம்பவத்தில்  தொடர்புடையவர்கள் மற்றும் உதய சூரியனுக்கு பதிலாக தேர்வு எழுதிய இளைஞரையும்  சிபிஐடி போலீஸார் விரைவில் கைது செய்து விசாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்