நீட் தேர்வில் மேலும் இரண்டு பேர் ஆள்மாறாட்டமா? அதிர்ச்சி தகவல்

வியாழன், 26 செப்டம்பர் 2019 (07:42 IST)
சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவன் மும்பையில் நடந்த நீட் தேர்வில் வெற்றி பெற்று, அதன்மூலம் கலந்தாய்வில் பங்கேற்று தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து வந்த நிலையில் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் மூலம் மெடிக்கல் சீட் பெற்றதாக தேனி மருத்துவ கல்லூரி நிர்வாகத்துக்கு இ-மெயிலில் ஒரு புகார் வந்துள்ளது. இதனை தொடர்ந்து உதித் சூர்யாவை அழைத்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்திய பின்னர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தது.
 
 
இந்த நிலையில் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் திடீரென இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரை போலீசில் ஆஜராகும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியது
 
 
இந்த நிலையில், மாணவர் உதித் சூர்யா பெற்றோர்களுடன் திடீரென தலைமறைவானார். இதனால் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவர் திருப்பதியில் கைது செய்யப்பட்டு பின்னர் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
 
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உதித் சூர்யாவை போல் இன்னும் பலர் ஆள்மாறாட்டம் மூலம் மெடிக்கல் சீட் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தால் அனைவரின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன. இந்த நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மேலும் 2 பேர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த இருவரின் சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது சந்தேகம் வந்ததாக கல்லூரி நிர்வாகம் அரசுக்கு தகவல் தெரிவித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்