சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சீப் மெடிக்கல் ஆபீஸராகப் பணியாற்றி வந்த வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா. இவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இது சம்மந்தமாக அந்த மருத்துவ கல்லூரி டீன் அளித்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு விசாரணை செய்து வருகின்றனர். இதையடுத்து சம்மந்தப்பட்ட மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைப் பிடிக்க 10 பேர் கொண்ட தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் மாணவர் சார்பாக முன்ஜாமீன் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலிஸாருக்கு தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மாணவர் முன் ஜாமீன் கோரிய வழக்கில் நேற்று நடந்த விசாரணையில் மாணவர் சார்பில் ‘பணம் பறிக்கும் நோக்கில் இந்த பிரச்சனை கிளப்புகின்றனர். மாணவர் உதித் சூர்யா மன உளைச்சலில் உள்ளார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கினால். விசாரணைக்கு ஆஜர்படுத்துகிறோம்’ என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.